படவேடு ரேணுகாம்பாள் திருக்கோயில் ஸ்தல வரலாறு:

ரைவத மகாராஜனின் மகளாக பிறந்த ரேணுகாதேவி,ஜமதக்னி முனிவரை மணம் செய்துக் கொள்கிறாள். பரசுராமரை பெற்றெடுக்கிறாள். பதிவிரதை என்பதால், தினமும் கணவரின் பூஜைக்கு  கமண்டல நதியில் இருந்து சுடப்படாத மண்பானையில் தண்ணீர்  எடுத்து வருவது வழக்கம். அதேபோல் ஒருநாள் தண்ணீர் எடுத்துவரும்போது வான வீதியில் சென்ற  கந்தர்வன் நிழலை நீரில் கண்டு அவன் அழகில் மயங்கி ஆச்சர்யம் அடைந்தாள். இதனால் மண் குடம் உடைந்து விடுகிறது. இதை  ஜமதக்னி முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார். உடனே மகன் பரசுராமனை அழைத்து தாயின் தலையை வெட்டி கொண்டு வரும்படி  உத்தரவிடுகிறார்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கொள்கையை உடைய  பரசுராமரும் தாயின் தலையை துண்டித்தார். அப்போது அதை தடுக்க முயன்ற சலவைப்பெண்ணின் தலையையும் துண்டித்தார்.  பின்னர் தாயின் தலையை துண்டித்துவிட்டதாக தந்தையிடம் வந்து கூறினார். இதில் மகிழ்ந்துபோன ஜமதக்னி முனிவர், பரசுராமனிடம்,“உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்” என கூறினார். உடனே பரசுராமன் ‘தாயை உயிர்பித்து தாருங்கள்‘ என வரம் கேட்டார்.ஜமதக்னி முனிவர் கமண்டல நீரை மந்திரம் ஓதி அதை பரசுராமரிடம் கொடுத்து, தலையையும், உடலையும் ஒன்றாக வைத்து இந்த நீரை தெளித்தால் உன் தாய் உயிர் பெறுவாள் என கூறினார். அதை பெற்றுக்கொண்ட பரசுராமர் மகிழ்ச்சியில் வெட்டப்பட்டு கிடக்கும் தாயின் தலையை, அருகே உள்ள சலவை  பெண்ணின் உடலோடும், சலவை பெண்ணின் தலையோடு தாயின் உடலையும்  வைத்து இணைத்து உயிர்பித்தார்.  

உயிர் வாழ விருப்பமில்லாத ரேணுகாதேவி தீயில் விழுந்தாள். அப்போது மழை பெய்ததால் தீ அணைந்து, உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டன.

உடை அணிய முடியாமல் போனதால், வேப்பிலையை ஆடையாக அணிந்தாள். அத்துடன் சிவனைக் குறித்து தவமிருந்து, தனது தலை மட்டும் இந்த பூமியில் இருக்கட்டும், பாழும் உடல் வேண்டாம் என்ற வரத்தைப் பெற்றாள்.

அதன்படி இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக தலையை மட்டும் பிரதானமாகக் கொண்டு பக்தர்களுக்கு படவேடு கோயிலில் ரேணுகாம்பாளாக அருள்பாலிக்கிறாள் என்பது புராணம். .

சக்திக்குள் அனைத்தும் அடக்கம் என்பதற்கு ஏற்ப இங்குள்ள மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் அரூபமாக அருள்பாலிக்கின்றனர். எனவே, அம்பிகையை வழிபட்டால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

அத்தி மரத்தால் ஆன அம்மனின் முழு உருவமும், அதன் கீழ் சுயம்புவாக தோன்றிய அம்மனும், அம்மனின் இடப்பக்கம் ரேணுகாதேவியின் சிரசும் உள்ளது. பரசுராமரின் உருவமும் கருவறையில் உள்ளது. ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கத்தையும், ஜனாஹர்ஷண சக்கரத்தையும் வழிபாடு செய்தால் நினைத்தது நிறைவேறும்.

கண்பார்வைக் குறைபாடு, அம்மை, வயிற்று வலி உள்ளவர்கள், குழந்தைப் பாக்கியம் வேண்டுவோர் திருநீற்றைத் தண்ணீரில் கலந்து அருந்தி பலன் அடைகிறார்கள். பரசுராமரை வழிபாடு செய்து தொட்டில் கட்டினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.